பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
திருப்பூர்: தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையிலும், ஒற்றுமை உணர்வு ஓங்கவும், நாடு, நகரம் செழிக்கவும், மக்கள் வளம் பெற வேண்டியும், திருப்பூருக்கு ஆதரமான நொய்யல் நதிக்கரையில், மாநகராட்சி 31வது வார்டை சேர்ந்த 108 பெண்கள் நேற்று காலை 6.00 மணிக்கு பொங்கல் வைத்தனர். நதிக்கரையிலுள்ள, பெரிய விநாயகர் கோவில் முன் பெண்கள் வரிசையாக அமர்ந்து, கலாசாரப்படி, புதிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்தனர். பொங்கி வரும் சமயத்தில், "பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பினர். 108 பானைகளில் இருந்தும் சிறிதளவு பொங்கல் எடுத்து, இயற்கைக்கும், விநாயகருக்கும் படையலிட்டு, வழிபாடு நடத்தினர். பங்கேற்ற பெண்களுக்கு, சேலை, பித்தளை பொங்கல் பானை, அடுப்பு, குடம் உள்ளிட்டவையும், பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம், முந்திரி, நெய், கரும்பு உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு தேவையான மஞ்சள் காப்பு, பூ மாலை உள்ளிட்டவை துணை மேயர் குணசேகரன் சார்பில் வழங்கப்பட்டன. ஒரே சமயத்தில், 108 பெண்கள் , பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
* எல்.பி.எப்., சார்பிலும் பொங்கல் விழா நடந்தது. 100 பேருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. தி.மு.க., மாவட்ட செயலாளர் சாமிநாதன் வழங்கினார். பனியன் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். பனியன், பிரின்டிங் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமையில், கட்சியினர் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
* திருப்பூர் குமரன் சிலை அருகில் மாநகர ம.தி.மு.க., சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 500க்கும் மேற் பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. ம.தி. மு.க., மாநகர செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். நெசவாளர் அணி செயலாளர் சுப்ரமணி, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் நாகராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி, பொருளாளர் மணி உட்பட பலர் பங்கேற் றனர். கருவம்பாளையம், மாஸ்கோ நகர், சாமுண்டிபுரம் பகுதிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கிராம மக்கள் வருத்தம்:
வீரபாண்டி கிராம மக்கள் கூறியதாவது:
ஓணம் பண்டிகையை கேரள அரசு, ஒரு வாரம் கொண்டாடுகிறது. அம்மாநிலத்தின் பாரம்பரிய கலைகளை, இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்; கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாநில அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. வீர விளையாட்டுகளுக்கும், கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது தமிழகம். மழை காலத்தில் விதைக்கப்பட்டதை அறுவடை செய்யும் காலம் தை மாதம். இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், சூரியனுக்கு பொங்கல் வைக்கப்படுகிறது. இளைஞர்களுக்கும், உழவுக்கு பயன்படுத்திய காளைகளுக்கு உற்சாகத்தை கொடுக்கவும், ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மாலை நேரங்களில் விளையாட்டு போட்டி நடத்தி, உழவு சம்பந்தமான பாட்டுப்பாடி கும்மியடித்து கலை நிகழ்ச்சி நடத்தப்படும். இன்று, உழவுத்தொழிலையும் மறந்து விட்டோம்; பாரம்பரிய கலைகளையும் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விடுமுறை என்றால், வீட்டில் "டிவி முன் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதால், பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன."டிவியில் காண்பிக்கப்படும் கிராமியக் கலைகளை பார்த்தால் போதாது. எனவே, கேரளாவைபோல், பாரம்பரிய கலைகளை வளர்க்க, தமிழக அரசும், நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.