வர போறார் அழகர்; மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 11:04
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் கோலாகலமாக துவங்கியது
மதுரை ; மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்சியாக முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்த விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். அந்த வகையில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். சிறப்பு பெற்ற இவ்விழா வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரம் பொன்சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதற்காக அழகர்கோவிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தகால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில்நுழைவு வாயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது. கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்சியாக முகூர்த்தகால் நடப்பட்டதை தொடர்ந்து கள்ளழகர் மதுரை வரும் போது எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது. இந்நிலையில் மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வரும் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 27 -ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 28-ம்தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்ககல்யாணமும், சிகர நிகழ்சியாக திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகிறது. மதுரையில் கள்ளகர் திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியுள்ள நிலையில் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.