திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, தனி சன்னிதியில் வட்டப்பாறை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வழக்கம்போல, நடப்பாண்டு வட்டப்பாறை அம்மன் ஏழு நாள் உத்சவம், இவ்வாண்டு, ஏப்., 10ம் தேதி கொடியேற்றத்துடன் உத்சவம் துவங்கியது. விழா நாட்களில் உற்சவ தாயார், சம்பங்கி, சாமந்தி, தவனம், விருக்ஷி, செவ்வரளி, அரளி பூ மாலைகள் அணிந்து, பவளக்கால், ராஜாங்கம், புஷ்பம், அஸ்தமானகிரி, சவுடால், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட விமானங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, வட்டப்பாறை அம்மன் உற்சவ தாயார், கதம்ப பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் எழுந்தருளினார். பின், கயிலாய வாத்தியங்கள் முழங்க மாடவீதி உத்சவம் நடந்தது. தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் ஏழு நாள் உத்சவம் நிறைவுற்றது.