அன்னூர்: குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவிலில் புதிய சிறிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள சுனை எந்த காலத்திலும் வற்றாத தன்மையுடையது. இக்கோவிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பெரிய தேர் செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு, விநாயகருக்கு என தனியாக ஒன்பது அடி உயரத்தில், இலுப்பை மரத்தில், நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், சிறிய தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. வழக்கமாக தேர் செல்லும் வழியில் வெள்ளோட்டம் நடந்தது. இதில் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். வெள்ளோட்டத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.தேரோட்டம் பங்குனி மாதம் நடைபெற உள்ளது என, விழா குழுவினர் தெரிவித்தனர்.