பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
அன்னூர்: தாலுகா அலுவலகம் கட்ட கோவில் நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து, அன்னூரில் பல்வேறு இயக்கங்கள் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அன்னூர் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நிரந்தர கட்டடம் கட்ட, அன்னூர் சின்னம்மன், பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், நான்கு ஏக்கரை பெற, மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னூர், ஓதிமலை ரோட்டில், அக்கோவிலை குலதெய்வமாக கொண்டவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் சார்பில், நேற்று உண்ணாவிரதம் நடந்தது. தாமரை அறக்கட்டளை தலைவர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பிரதீப் தலைமை வகித்து பேசுகையில்,"முதல் கட்டமாக, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அடுத்த கட்டமாக, 10 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்வருக்கு அனுப்ப உள்ளோம். அதன்பின், கோவில் நிலத்தை எடுப்பதை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டம் நடத்தப்படும், என்றார். கோவை கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார், மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., நிர்வாகி திருமூர்த்தி, விஜயகுமார், ராஜராஜசாமி, ஆர்.எஸ்.எஸ்.பொறுப்பாளர் ரங்கசாமி உள்பட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.