பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், மந்தைவெளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இளைஞர்கள் அலகு குத்தி டிராக்டர்களில் தொங்கியபடி சென்றனர்.காஞ்சிபுரத்திலிருந்து, 10 கி.மீ., தொலைவில், வேலூர் செல்லும் சாலையில் தாமல் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மந்தைவெளியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது.
விழாவைக் காண தாமல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, ஏராளமான மக்கள் குவிந்தனர். கரும்பு, பொரி, வளையல், பலூன் வியாபாரிகளும் குவிந்தனர்.மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டிய இளைஞர்கள், தங்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு, டிராக்டரை இழுத்தபடி வீதியை வலம் வந்தனர். பெண்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர். சிறுவர்கள் தங்கள் உடலில் எலுமிச்சம் பழங்களை அலகு குத்திக் கொண்டு, கோலாட்டம் ஆடியபடி வந்தனர். சிலர் வேடமிட்டு ஆடியபடி வந்தனர். கரகம் எடுத்து வந்தவர்கள், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் நிறத்தை வெளிப்படுத்தும் வகையில், கரகத்தை சுற்றி வண்ணக் காகிதங்களை ஒட்டியிருந்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பூசாரி அந்தரத்தில் தொங்கியபடி, அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க, காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.