சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இங்கு ஏப்.20ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு விழா தொடங்கியது. ஏப்.28 ல் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று (ஏப்.29) தேரோட்டம் நடந்தது. சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மூலநாதசுவாமி, பிரியாவிடை தேர், அகிலாண்டேஸ்வரி அம்மன் தேர் இரண்டையும் சிவகோஷங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளில் பவனி வந்தனர். இன்று ஏப்.30 வைகையாற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. கண்ணன்பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி, கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.