மாணிக்க நாச்சியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2026 10:04
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,பூக்குழி இறங்கியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,21ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினசரி காலையில் அம்மன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கி தெற்குப்பட்டு மூலஸ்தானத்திற்கு சென்றது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், சலங்கை கரகம் சுமந்தும் பால்குடம் எடுத்து மூலஸ்தான அம்மனை வழிபட்டனர். பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேர் புறப்பட்டு கோயிலுக்கு வந்தடைந்தது. இன்று பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு தீபாராதனை, காலை 9:30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10:00 மணிக்கு மஞ்சுவிரட்டு நடைபெறும். இரவில் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.