காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் உத்சவத்தில், காலை பவழக்கால் சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் கச்சபேஸ்வர் வீதியுலா வந்தார். ஆறாம் நாளான நேற்று இரவு யானை வாகனம் உத்சவம் நடந்தது. ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தளிய கச்சபேஸ்வரர், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர். எட்டாம் நாள் உத்சவமான நாளை இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் உத்சவமான நாளை காலை, ஆள் மேல் பல்லக்கும், இரவு முருக்கடி சேவை தலமகிமை காட்சி உத்சவமும் நடக்கிறது. இதில், 10ம் நாள் உத்சவமான வரும் 3ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 12ம் நாள் உத்சவமான 5ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் உத்வசமும் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, தினமும் மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.