பல்லடம்: கடும் வறட்சியில் இருந்து தப்பிக்க, மழை வேண்டி, சிறப்பு யாக பூஜை நடத்துவது என, விவசாய சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே, நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவிடத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயல் தலைவர் வெற்றி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தற்போது, பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில், கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் இன்றி, பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. விவசாயிகளுக்கு, பாசனத்திற்கான தண்ணீர் கிடைக்கவும், பொதுமக்களுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மழை பொழிவு அவசியம். இதற்காக, மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும், மே 18 அன்று என்.எஸ். பழனிசாமியின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர். முன்னதாக, என்.எஸ்.பழனிசாமியின் நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.