கீழ்மருவத்துாரில், பழமைவாய்ந்த அஞ்சுரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 28ம் தேதி துவங்கின. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, கோ பூஜை நடந்ததை அடுத்து, இன்று காலை 8:30 மணிக்கு மேல் கோவில் கோபுர விமானத்திற்கும், 9:00 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் பங்கேற்று, கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின், அஞ்சூரம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கீழ்மருவத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்.