பதிவு செய்த நாள்
19
ஜன
2013
11:01
கன்னியாகுமரி: சாமிதோப்பு தலைமைப்பதியில் தைத்திருவிழா நேற்று (18ம் தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை மற்றும் வைகாசி மாதங்களில் கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் விழா நடப்பது வழக்கம். இதில் தைதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு பதமிடுதல், திருக்கொடி பட்டம் பிரகார வலம் வருதலை தொடர்ந்து திருக்கொடியேற்றம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பாலபிரஜாபதி அடிகள் கொடியேற்றினார். தொடர்ந்து பணிவிடை தர்மங்கள், மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், மாலையில் பணிவிடை, இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எளுந்தருளல் ஆகியன நடந்தது.
இரண்டாம் நாளான இன்று (19ம் தேதி) மாலை மயில்வாகனத்தில் வீதி வலம் வருதல், மூன்றாம் நாள் இரவு அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாற்றி தெருவீதி வலம் வருதல், நான்காம் நாள் இரவு பூஞ்சப்பரத்தில் எழுந்தருளல், ஐந்தாம் நாள் அய்யா பச்சை சாற்றி சப்பர வாகனத்தில் எழுந்தருளல், ஆறாம் நாள் சப்பர வாகனத்தில் எழுந்தருளல், ஏழாம் நாள் கருட வாகனத்தில் சிவப்பு சாற்றி எழுந்தருளல் நடக்கிறது.
கலிவேட்டை: எட்டாம் நாள் (25ம் தேதி) மாலை அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து முந்திரிகிணறு அருகில் கலிவேட்டையாடுதல், தொடர்ந்து செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டபணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய இடங்களில் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், இரவு அன்னதானம், ஒன்பதாம் நாள் அனுமார் வாகனத்தில் அய்யா தெருவீதி வலம் வருதலும், பத்தாம் நாள் (27ம் தேதி) திருவிழாவன்று இந்திர வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் ஆகியன நடக்கிறது.
தேரோட்டம்:11ம் நாள் (28ம் தேதி) பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளுகிறார். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் பணிவிடை, மாலையில் வாகன பவனி, இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.