பதிவு செய்த நாள்
03
ஜூன்
2026
10:06
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருஞானசம்பந்தர், திருநீலநக்கநாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருகநாயனார் குருபூஜை நேற்று நடந்தது.
அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று குருபூஜை நடந்தது. முதல், 63 நாயன்மார் மண்டபத்தில் உள்ள நான்கு நாயன்மார்களுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, மகா மண்டபத்தில் உள்ள, ஞானசம்பந்தர் உள்ளிட்ட நான்கு நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிவனடியார்களும், பக்தர்களும், திருத்தொண்டத்தொகை, திருவாசகம், தேவார பதிகம் பாராயணம் செய்து வழிபட்டனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.
ஸ்ரீகருணாம்பிகை கலையரங்கில் நடந்த இந்நிகழ்ச்சி, கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோவிலில், திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து தேவார திருப்பதிகங்கள் முற்றோதல் நடைபெற்றது. தொடர்ந்து, திருஞானசம்பந்த சுவாமிகள் புறப்பாடு மற்றும் பெருமானோடு கலத்தல் வைபவம் நடைபெற்றது. சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.