பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
நகரி: பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் போது, உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடையும் பக்தரின் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அத்துடன், பாத யாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும், "திவ்ய தரிசன டோக்கன்களுக்கான கட்டுப்பாடும் நீக்கப்படும் என, திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி, திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், சேர்மன் பாபிராஜூ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி, அவர் கூறியதாவது: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாத யாத்திரை பக்தர்களுக்கு, "திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதில், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளன. பாத யாத்திரை பக்தர்கள் அனைவருக்கும், இனி நிபந்தனையின்றி டோக்கன் வழங்கப்படும்.திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக, பாத யாத்திரையாக திருமலைக்கு வரும்போது, பக்தரில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இத்தொகை, காப்பீட்டு திட்டத்தின் மூலம், பக்தரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.மகா கும்பமேளாவை ஒட்டி, அலகாபாத்தில் திறக்கப்பட உள்ள வெங்கடேச பெருமாளின் மாதிரி கோவிலை, வரும், 27ம் தேதி முதல் மார்ச், 10ம் தேதி வரை நீட்டித்து, நித்ய பூஜைகள் செய்யப்படும். அங்கு, பக்தர்களின் உணவு வசதிக்காக, இலவச அன்ன பிரசாதம் வழங்கும் மையம் ஏற்படுத்தப்படும். வருமானம் அதிகமாக கிடைக்கும் முக்கிய நகரங்களில் தேவஸ்தானம் சார்பில், புதிதாக திருமண மண்டபங்கள் கட்டப்படும். இவ்வாறு, சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.