பதிவு செய்த நாள்
24
ஜன
2013
10:01
சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள, காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது, ஹெலிகாப்டர் மூலம், பூக்கள் தூவப்பட்டன. பாரிமுனை, தம்பு செட்டித் தெருவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, காளிகாம்பாள் கோவில் உள்ளது. 2001ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின், 12 ஆண்டுகள் கழித்து, நேற்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலின் முகப்பு மண்டபம், பிரதான மண்டபங்கள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள், இரண்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன. சிவாச்சாரியார் அறக்கட்டளை சார்பில் நடந்த கும்பாபிஷேகம், 17 மற்றும் 23ம் தேதி என, இரண்டு கட்டங்களாக நடந்தன.முதல் கட்ட கும்பாபிஷேகம், விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, கடந்த, 17ம் தேதி நடந்தது.இரண்டாம் கட்டமாக, நேற்று, காளிகாம்பாள், மூலவர் விமானம், ராஜகோபுரம் உள்ளிட்டவற்றுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தனியார் ஹெலிகாப்டர் மூலம், வானத்திலிருந்து பூக்கள் தூவப் பட்டன. மாலை, 4:00 மணிக்கு, மகா அபிஷேகமும், 6:00 மணிக்கு உற்சவர் பூஜையும், 7:00 மணிக்கு காளிகாம்பாள் சாம்ராஜ்ய பட்டாபிஷேகமும் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு, காளிகாம்பாள், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.