பதிவு செய்த நாள்
24
ஜன
2013
10:01
தமிழகம் முழுவதும் உள்ள, 100 கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறையால், நேற்று குடமுழுக்கு நடந்தப்பட்டது. ஒவ்வொரு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்களில் குடமுழக்கு நடத்த வேண்டும் என்பது, ஆகமவிதி. இதனை அடிப்படையாக கொண்டு, கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. கடந்த, 2011 ஆம் ஆண்டில், 1006 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அடுத்த மாத்திற்குள், 1006 கோவில்களில், திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத்துறையால் முடிவு செய்யப்பட்டது. அதன் படி, தமிழகத்தில் ஆழ்வார்கள் மங்களாசனம் செய்யப் பெற்ற கோவில்கள், நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலங்கள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கோவில்கள், சுற்றுலாத்துறை முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் திருப்பணி நடக்கிறது. இவற்றில், திருப்பணி முடிந்து, தயார் நிலையில் இருந்த, 100 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. சென்னையில் முச்சந்தி சித்தி விநாயகர் மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பொன்னியம்மன் கோவில், காளிகாம்பாள் கோவில், மாகாளி அம்மன் கோவில் ஆகியவற்றிலும், குடமுழுக்கு நேற்று நடந்தது. தமிழகம் முழுக்க நடந்த குடமுழுக்கில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். - நமது நிருபர் -