பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
மண்ணச்சநல்லூர்: திருவாசியில் ஆச்சிரமவள்ளி, விளங்கவந்தாள் அம்மன், பரிவார கோவில்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மண்ணச்சநல்லூர் தாலுகா திருவாசியில் சிவன் கோவில் தேரோடும் வீதியில், நான்கு திசைகளிலும் அமைந்துள்ள விநாயகர் கோவில், அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள ஆச்சிரமவள்ளி, விளங்கவந்தாள் அம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கப்பிக்கப்பட்ட கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்பிலில் உள்ள ஆச்சிரமவள்ளி அம்பாளை இளநீர் மூலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி கடந்த, 20ம் தேதி நடந்தது. 21ம் தேதி புண்யாகவாசனம், கடம் பிரதிஸ்டை, கணபதி ஹோமம் நடந்தது. அன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை, 4.30 மணியளவில் திருவாசி சிவன் கோவில் தேரோடும் வீதியில் ஈசான்ய பாகத்திலும், அக்னி மூலையிலும் அமைந்துள்ள விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 7.15 மணியளவில் நிர்னிதி திசை, வாயு மூலையில் அமைந்துள்ள விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9.30 மணியளவில் அய்யன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஆச்சிரமவள்ளி அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10.30 மணியளவில் விளங்கவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை செல்லப்பா சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் திருவாசி முத்துசெல்வம், மாதவப்பெருமாள் கோவில் செந்தில் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.