பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி கோவிலில், ராஜகோபுரம் மற்றும் சம்மோகன கோபால ஸ்வாமிக்கு, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இக்கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நேற்று கோலாலகமாக நடந்தது. கடந்த, 19ம் தேதி யாக பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை, தமிழக அமைச்சர் தங்கமணி முன்னிலையில், ராஜகோபுர நுழைவு வாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் திருமஞ்சனம், வாஸ்து ஹோமம், மகா சாந்தி ஹோமம், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு புன்யாகவாசனம், உற்சவர் திருமஞ்சனம், பூர்ணாகுதியும், மாலை, 4 மணிக்கு அக்னிப்ரணயணம், நித்யாராதனமும் நடந்தது. நேற்று காலை, 8.30 மணிக்கு பரிவார கும்பங்கள் அந்தந்த சன்னதிக்கு எழுந்தருளுதல், காலை, 9 மணிக்கு ராஜ கோபுரம், கருவறை விமானம் கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மூலஸ்தான மகா சம்ப்ரோஷணம், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 4.30 மணிக்கு பத்மாவதி பரிணய உத்ஸவமும், இரவு, 7 மணிக்கு பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் ஸ்வாமி, அசலதீபேஸ்வரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். எம்.எல்.ஏ., பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், மோகனூர் டவுன் பஞ்சாயத்து சேர்மன் லட்சுமி, யூனியன் சேர்மன் சிவசாமி, அனந்தபத்மநாபாச்சார்யார் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருமால் வழிபாட்டு மன்றம், விழாக்குழுவினர் செய்தனர்.