பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
ஆழ்வார்குறிச்சி: கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடையத்தில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் 11 ஆண்டுகளுக்கு பின் கடந்த 17ம்தேதி கும்பாபிஷேக விழா பல்வேறு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைளும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 3மணியளவில் ஆறாம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, வேதபாராயணம் முதலியன நடந்தன. தொடர்ந்து யாத்ரா தானமும், கும்பம் எழுந்தருளலும் நடந்தது. பின்னர் 6.45 மணிக்கு விமானம், ராஜகோபுரம் மற்றும் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாணமும், தீபாராதனையும் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கும்பாபிஷேகத்தை சங்கர்நகர் கணேசசிவாச்சாரியார், கோயில் அர்ச்சகர்கள் கல்யாணசுந்தரபட்டர், முத்துக்குமாரசாமிபட்டர் மற்றும் சிவாச்சாரியர்கள் நடத்தினர். நெல்லை வள்ளிநாயகம், கடையம் ஓய்வுபெற்ற தாசில்தார் கல்யாணசுந்தரம், தேவார பாடல்கள் மற்றும் யாகசாலை திருமுறைகள் நிகழ்த்தினர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி, தக்கார், ஆய்வாளர், கோயில் திருப்பணி கௌரவ ஆலோசகர்கள், நித்யகல்யாணி சேவா சமாஜம், கடையம் பக்தஜன சபா மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பை டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன் (கடையம்) பால்ராஜ் (கல்லிடைகுறிச்சி) மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.