குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் விரும்பும் மிட்டாய் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2013 10:01
ஒட்டன்சத்திரம் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயிலில் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்த நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். நாளை மறுநாள்(ஜன.27) பழநியில் நடக்கும் தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்க பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து, குழு குழுவாக பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழியில்தான்(ஒட்டன்சத்திரம்-பழநி ரோடு) செல்ல வேண்டும். கேட்கும் வரத்தை கொடுக்கும் பழநிமலை முருகன், ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவமாக காட்சி அளிக்கிறார். பாதயாத்திரையாக பழநிக்கு செல்லும் முருக பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று குழந்தை வேலப்பரை வழிபடாமல் செல்வதில்லை. பக்தர்கள் மனம் உருகி முறையிடும் குறைகளை குழந்தை வேலப்பர் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இவர்களின் குறைகள் நிவர்த்தி ஆகும் பட்சத்தில் அடுத்த முறை இங்கு வரும்போது குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய் வகைகளை வைத்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுகிறது.