பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
பழநி: தமிழகத்திலேயே அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பழநி கோயிலில், நிதி இருந்தும், ஊழியர்கள் பற்றாக்குறையால், கும்பாபிஷேகப்பணி உட்பட வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பழநி கோயிலில், காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக, நிரப்பப்படாததால், பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது. கடந்த 2009, 2011 ல், பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலும் நடந்தது; இருப்பினும் நிறுத்தி வைக்கப்பட்டது. "பழநி போன்ற முதுநிலை கோயில்களில், காலிப்பணியிடங்களை நிரப்பும் போது, தங்களுக்கு 30 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என, சிறுகோயில் பணியாளர்கள், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த கோர்ட், சிறுகோயில் பணியாளர்கள் கோரிக்கையை ஏற்கவும்; பணியில் முன்னுரிமை அளிக்க முடியுமா என பதிலளிக்கக் கோரியும், இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கோர்ட் உத்தரப்படி, தற்போது உள்ள காலிப்பணியிடங்களில் 30 சதவீதம் மட்டும் விட்டுவிட்டு, மீதி பணி இடங்களை நிரப்பிக்கொள்ள அறநிலைத்துறையிடம், தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது. ஆனால், அறநிலையத்துறையோ, "அமைச்சர், முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என, ஒப்புக்கு பதிலளிக்கிறது. இதனால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பணிச்சுமை: உதவிக்கமிஷனர், மெக்கானிக் பொறியாளர், கணக்கு பதிவேடுதுறை, மேற்பார்வையாளர் உட்பட 250 பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைப்பளுவால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்து உள்ளன.
கோரிக்கை: தற்போது பணிபுரியும் பணியாளர்களுக்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கவில்லை. பணிக்கொடை, கூடுதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி போராட்டங்கள் நடத்தி உள்ளனர். "முதியோர் ஓய்வூதியம் கூட, 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. எங்களுக்கு வெறும் 800 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் என்கின்றனர் ஊழியர்கள். அவர்கள் கூறியதாவது: பணிக்கொடை, கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். பழநி கோயிலுக்கு, சபரிமலை, குருவாயூர், திருப்பதி போல "தன்னாட்சி உயர் அந்தஸ்து வழங்க வேண்டும். கோரிக்கைகளை அமைச்சர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
நின்றுள்ள பணிகள்: பழநி சுற்றுலா பஸ்கள் நிறுத்தும் இடத்தில், 20 லட்ச ரூபாயில், கோயில் கழிவுநீர், குப்பையில் இருந்து, சமையல் எரிவாயு தயாரிப்பதற்கான பணி துவக்க நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும், 33 லட்ச ரூபாயில் திருஆவினன்குடி கோயிலில், "சோலார் விளக்கு அமைக்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் திருப்பணிகளுக்கு, 90 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிர்வாகப்பணிகளை கண்காணிக்க பணியாளர்கள் இன்றி, தொய்வு ஏற்பட்டு உள்ளது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பழநி கோயில் நிர்வாகம், திருப்பதி, குருவாயூர் போல தன்னிச்சையாக இயங்க முடியாது. அறநிலையத்துறையின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுப்படி செயல்பட வேண்டும். ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள பழநி கோயிலில், வளர்ச்சிப்பணிகள் செய்ய, அறநிலைத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம். இணை கமிஷனருக்கு, 5 லட்ச ரூபாய் வரை மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. "மெட்டீரியல் ரோப் கார் பணிகள் முடிந்து விட்டன; ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை; இதுபற்றி, சென்னை அலுவலகத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். அங்கு, "அமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனக்கூறுகின்றனர். இதனால் அன்னதான பொருட்கள், பஞ்சாமிர்தம் போன்றவற்றை "வின்ச் மூலம் அனுப்புகிறோம்; பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.