பதிவு செய்த நாள்
28
ஜன
2013
10:01
பழநி: பழநியில் அரோகரா கோஷத்துடன், தைப்பூச தேரோட்டம் நடந்தது. சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்தனர். பழநி தைப்பூச விழா, ஜன., 21 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று, தைப்பூசம். அதிகாலை 4 மணிக்கு, மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம்: தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டனர். மலைகோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கும்பாபிஷேக நினைவரங்கு அருகில், யானைப்பாதை வழியாகவும்; கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுப்பப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்க, யானைப் பாதையில், ஆறு நிலைகளில் பக்தர்கள் நிறுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர். தரிசனத்திற்கு பக்தர்கள், 5 மணி நேரம் காத்திருந்தனர். புஷ்ப அலங்காரம்: புஷ்ப கைங்கர்ய சபா சார்பில், பாரவேல் மண்டபத்திலும், மகா மண்டபத்திலும் 1000 கிலோ பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தேரோட்டம்: நேற்று அதிகாலை, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்த்ர தேவருடன், சண்முக நதி தீர்த்தவாரிக்கு, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினர். சிறப்பு யாகம் நடந்தது. காலை 11.30 மணிக்கு, தேர் ஏற்றம் நடந்தது. மாலை 4.25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேர் புறப்படும் முன், விடலை தேங்காய்களை உடைத்து, நவதானியங்களையும், பழங்களையும் பக்தர்கள் தேரின் மீது வீசினர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாலை 5.20 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. திருச்செந்தூரில் கோலாகலம்: திருச்செந்தூரில் நடந்த தைப்பூச விழாவில், பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது; 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு, சுவாமி அஸ்திரதேவர், கடலில் புனித நீராடி தீர்த்தவாரி நடந்தது. மூலவர் சுப்பிரமணியருக்கு, உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து, சுவாமி அலைவாயுகந்த பெருமான், தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில், அபிஷேகம், தீபாராதனைக்குப்பின், தங்க மயில் வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். அதிகாலை முதலே, பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.