பதிவு செய்த நாள்
28
ஜன
2013
03:01
பாண்டிய நாட்டில் மதுரையம்பதியில், சங்கப்புலவர் மரபில் தோன்றியவர் சிதம்பர சுவாமிகள் என்கிற சிதம்பரதேவர். இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரது புலமையைப் பாராட்டி கவிராயர் என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். இலக்கியப் புலமையோடு தெய்வ பக்தியும் இவரிடம் மிகுந்திருந்தது. மதுரையை அரசாளும் மீனாட்சியம்மையைத் தம் உபாசனா மூர்த்தியாகக் கொண்டு, பணிந்து பூஜித்து வந்தார். குமாரதேவர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு வேதாந்தம், யோகசாதனம் போன்றவற்றைப் பயின்றார். வீரசைவ ஆகம முறைப்படி குருவிடம் இருந்து தீட்சை பெற்று உபதேசமும் கிடைக்கப்பெற்றார். ஒருநாள் சிதம்பரதேவர் தியானத்தில் இருந்தபோது ஒரு மயில் தோகை விரித்து ஆடக் கண்டார். அதன் விளக்கத்தைத் தமது குருவான குமாரதேவரிடம் கேட்க, உமது உபாசனா தேவியாகிய மதுரை அங்கயற்கண்ணி இதனை விளக்குவாள் என்றார் அவர்.
உடனே, மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க ஓடினார் சிதம்பரதேவர். மீனாட்சியம்மை கலிவெண்பா என்னும் பாமாலையை அம்பிகைக்குச் சூட்டினார். 45 நாள் முடிவில் சிதம்பரதேவருக்குக் காட்சி தந்தாள் அன்னை. அதோடு, வடக்கே யுத்தபுரி (திருப்போரூர்) சென்று, அங்கே எம் புதல்வன் குமரனது ஆலயத்தைப் புதுப்பித்துப் பொலிவடையச் செய்வாயாக! என்று அருள்பாலித்தாள். மீனாட்சியின் ஆணையை ஏற்ற சிதம்பரதேவர், அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் சென்றார். அங்கே அவரது குரு குமாரதேவர் யோகநிலையில் இருக்கக் கண்டு, அவரை வலம் வந்து வணங்கினார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்தில் சிவஞான பாலய சுவாமிகளைத் தரிசித்தார். அவருடன் சில நாட்கள் தங்கிப் பேசி இன்புற்ற பிறகு திருப்போரூரைச் சென்றடைந்தார்.
திருப்போரூரில் அவர் முதன் முதலாக தரிசித்தது வேம்படி விநாயகரை! தொட்ட காரியம் வெற்றி பெற விநாயகரின் துணை வேண்டுமே? அதனால், விநாயகரின் அனுக்கிரகத்தை முதலில் பெற்ற பிறகு, அன்னை மீனாட்சி குறிப்பிட்ட கந்தன் ஆலயத்தைத் தேடும் முயற்சியை மேற்கொண்டார். அப்போதெல்லாம், திருப்போரூரில் காணும் திசையெங்கும் பனங்காடாகவே இருந்தது. அந்தக் காட்டில் கந்தனைத் தேடி அலைந்தபோது, ஒரு பெண் பனை மரத்தின் கீழே சுயம்பு மூர்த்தியாக கந்தவேள் காட்சி அளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார். வேம்படி விநாயகர் கோயிலில் தங்கி, அங்குள்ள வள்ளையார் ஓடை என்னும் குளத்தில் தினமும் நீராடி, கந்தனை வழிபட்டு வந்தார் சிதம்பரதேவர். இப்படி இருக்கையில்தான், கந்தனுக்கு கோயில் எழுப்புவதற்கான சந்தர்ப்பமும் தேடி வந்தது. வழிப்பறிக் கொள்ளையர் சிலர், சிதம்பர தேவரிடமும் தங்களது கைவரிசையைக் காட்ட முயன்றனர். முருகப்பெருமான் சும்மா இருப்பாரா? திருட வந்தவர்களுக்கு பார்வை பறிபோனது. தவற்றை உணர்ந்து சிதம்பரதேவரின் காலில் விழுந்து கதறி அழுதனர். கொள்ளையடிப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள். திருடிச் சேகரித்த பொருளை, இங்கு அமையப்போகும் கந்தன் ஆலயத் திருப்பணிக்குக் காணிக்கையாக அளியுங்கள். முருகன் உங்களுக்கு மீண்டும் பார்வையை வழங்குவார் என்றார் சுவாமிகள்.
கொள்ளையர்களுக்கும், தாங்கள் அதுவரை கொள்ளையடித்த பொருட்களை கந்தனது திருவடியில் காணிக்கை ஆக்குவதாக சத்தியம் செய்து, அதைக் கொடுத்தனர். என்ன ஆச்சரியம்.... அக்கணமே அவர்களுக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது. முருகன் நிகழ்த்திய அற்புதத்தை அனுபவபூர்வமாகக் கண்ட கொள்ளையர்கள், கோயில் எழுப்பும் திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்தனர். இந்நிலையில் ஒருநாள், சிதம்பரதேவரைக் காண நேரில் வந்தார் முருகப்பெருமான். அதுவும், தேவரின் குருவான குமாரதேவர் உருவில்! குருதான் வந்திருக்கிறார் என்றெண்ணி மகிழ்ந்து, அவரை வரவேற்றார் சிதம்பரதேவர். தாம், திருப்போரூர் வந்த கதையையும் சொன்னார். குமாரதேவர் வடிவில் வந்த குகப் பெருமான், தமது திருக்கரத்தால் சிதம்பர தேவரது நெற்றியில் திருநீறிட்டு நயன தீøக்ஷ (பார்வை அனுக்ரஹம்) செய்தார். அப்போது, முன்பு அங்கே முருகனின் ஆலயம் இருந்த அமைப்பு, சிதம்பர தேவர் மனக்கண் முன் காட்சியளித்தது. குருவின் வருகையையும், அதனால் தனக்குள் உண்டான மாற்றத்தையும் கண்டு வியந்தார் சிதம்பரதேவர். அது பற்றிக் குருவிடம் கேட்க முயன்றபோது, அவர் சட்டென்று அங்கிருந்த சுயம்பு மூர்த்தியினுள் புகுந்து மறைந்தார்.
அதைக் கண்ட சிதம்பரதேவர், கந்தனே குரு வடிவில் வந்ததை அறிந்து பேரானந்தம் கொண்டார். விரைவில் கோயில் கட்டும் திருப்பணிகளைத் தொடங்கினார். அருணகிரியார் காலத்தில் சிறப்புற்று விளங்கி, அவர் தமது திருப்புகழில் பாடிப் பரவசப்பட்ட திருப்போரூர் முருகன் ஆலயம் மீண்டும் சிதம்பரதேவரால் உலகுக்குத் தெரிய ஆரம்பித்தது. இதற்கிடையில், முருகனின் அருளால் அற்புதங்கள் பலவும் நிகழ்த்த ஆரம்பித்தார் சிதம்பர தேவர். தீராத நோய்களுடன் வந்தவர்கள், அவர் தந்த திருநீறால் குணம்பெற்றார்கள். மக்களும் அவரை திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர். திருப்பணிக்கு தேவையான பொருள்களை பக்தர்களே தேடிவந்து கொடுத்தனர். இதனால் தங்கு தடையின்றி வேகமாக எழுந்தது திருப்போரூர் முருகன் கோயில். கண்ணுவப்பேட்டையில் தமக்கென்று பூஜை மடம், ஒடுக்க அறை முதலியனவற்றையும் அமைத்துக் கொண்டார் சிதம்பர சுவாமிகள்.
முருகன் கோயிலில் கர்ப்பகிரகம், அந்தராளம், மகா மண்டபம் ஆகிய திருப்பணிகளுடன் பரிவார மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தார். மூலவர் சன்னதி அருகில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கி இவர் அமைந்த யந்திர ஸ்தாபனம் மிகவும் பெருமை வாய்ந்தது. வேறு எந்த முருகன் ஆலயத்திலும் காண இயலாத இந்த அமைப்பை சுவாமிகள் இங்கே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த யந்திரத்தில் விநாயகர், சுப்ரமண்யர், வள்ளி, தேவசேனை, சிவபிரான், உமாதேவி, சண்டீசர், அஷ்டதிக் பாலகர்கள், பைரவர் ஆகியோருக்கு உரிய பீஜாட்சர மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. கூர்மம், அஷ்டகஜம் (எட்டு யானை) அஷ்ட நாகம், தேவ கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இந்தச் சக்கரத்தை அமைத்துள்ளார் இதற்கான விசேஷ பூஜை முறைகளை சுவாமிகளே ஏற்படுத்தியுள்ளார். வழக்கமான தினசரி பூஜையுடன், மகா ஸ்கந்த சஷ்டி ஆறு நாட்களும் இதற்குச் சிறப்பான அபிஷேக வழிபாட்டுடன், யந்திரமாலா பூஜை செய்யவும் வழிகாட்டியுள்ளார். காஞ்சிப் பெரியவர் ஒருமுறை இந்தக் கோயிலைத் தரிசித்தபோது, இந்தச் சக்கரத்தில் தீட்சண்யம் மிக அதிகமாக இருப்பதை உணர்ந்து, தமது திருக்கரத்தால் தொட்டு அருள்பாலித்தார்.
திருப்போரூர் கந்தப்பெருமானுக்குக் கற்கோயில் கட்டியது போல் சொற்கோயில் ஒன்றையும் உருவாக்கினார் சிதம்பர சுவாமிகள். வேதசாரம், ஆகமவிதி, சாத்திர உண்மை, தோத்திர விருப்பம், கந்தவேள் கருணை முதலான அனைத்தும் அடங்கிய பாடல்களின் தொகுப்பான திருப்போரூர் சன்னதி முறை என்னும் அற்புதமான பிரபந்தம்தான் அது. இந்தத் தோத்திரத் தொகுப்பில்... பிள்ளைத்தமிழ், அலங்காரம், மாலை, தூது, ஊசல், பள்ளிஎழுச்சி, திருவடிப்பற்று, சித்தொளி, சிற்சுகம் போன்ற பாவகைகளுடன் கூடிய 726 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சன்னதி முறை என்னும் புதிய வடிவத்துக்கு இதுவே முதல் இலக்கியமாகும். இதிலுள்ள பிணி நீக்கும் பதிகம், மழைப்பதிகம் போன்றவை திருப்போரூர் கந்தப்பெருமானின் பேரருளைக் காட்டும் தோத்திரங்கள் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் எண்ணற்ற பதிப்புகளுடன் வெளிவந்த ஒரே நூல் இது. இதன் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் மற்றும் பாரீஸில் உள்ள மியூசியம் ஆகியவற்றில் உள்ளன.
முருகனுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அருந்தமிழுக்கும் சேவையாற்றிய சிதம்பர சுவாமிகள், ஒரு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று தமது ஒடுக்க அறைக்குள் சமாதியுள் நின்று பரிபூரணத்தை அடைந்தார். அதேநேரம், திருக்கோயிலில் தமது உருவத்தைக் காட்டி, உச்சிமேல் குவித்த கைகளோடு மூலஸ்தானத்துக்குள் சென்று இறைவனோடு இரண்டறக் கலந்தார். சுவாமிகள் முக்தி அடைந்தது 1659-ஆம் ஆண்டு என்று தெரிய வருகிறது. மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்போரூர்ச் சன்னதிமுறை, பஞ்சாதிகார விளக்கம் ஆகியவை சிதம்பர சுவாமிகள் இயற்றிய நூல்கள். வைராக்ய சதகம், வைராக்ய தீபம், கொலை மறுத்தல், அவிரோத உந்தியார், ஒழிவில் ஒடுக்கம், திருவாசகத்துள் ஒரு பாடல் ஆகியவை இவர் எழுதியுள்ள உரை நூல்கள். சுவாமிகளது விரிவான சரித்திரம், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.