பதிவு செய்த நாள்
28
ஜன
2013
03:01
விருத்தகிரியில் உள்ள மணிமுத்தாறில் உடலை தூய்மை செய்து விட்டு சர்வேஸ்வரனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். அந்த சித்தர் வழியில் அழகான மாந்தோப்பு ஒன்று இருந்தது. அதில் சற்று ஓய்வெடுக்கலாமே என்று நின்றவருடைய கவனத்தை அங்கே விழுந்து கிடந்த மாங்கனி கவர்ந்தது.அதனைக் கையில் எடுத்தார். உடனே அதைப் பார்த்துவிட்ட தோப்புக் காவலாளி, அவரைக் களவாணி என்று நினைத்தான். சுவாமிகளை அடித்து துவைத்தான். சுவாமியின் ஆற்றலை அவன் அறிந்தானில்லை. மாங்கனிக்காக என்னை அடித்த மாபாவி என்று அந்த காவலாளி பற்றி அறம் பாடினார். அவ்வளவுதான்.... அந்தக் காவலாளி அங்கேயே அப்போதே மடிந்து விழுந்தான். இந்த அளவிற்கு தவசக்தி பெற்ற முப்பத்திரண்டு வயதில் தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளிய அவர் - ஓம் சிவப்பிரகாச சுவாமிகள்.
அறிவும் தெய்வீகமும் இணைந்த சுவாமிகளின் வரலாறு விந்தையிலும் விந்தை விவேகத்தின் எல்லை கடந்த பெருநிலை மனித ஆற்றுக்கு அப்பாற்பட்ட அருள்நிலை இவர் அவதரித்ததே தனிக் கதை. காஞ்சிபுரத்தை பிறப்பிடமாக கொண்டவர் குமாரசாமி தேசிகர் திருவண்ணாமலையில் வாழ்ந்து சிவஞானத்தில் பெருநிலை அடையப் பெற்ற குருநாதர் என்ற பெரியவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு தராணதீட்சை பெற்றவர். அவருக்கு பிறந்தவர்தான் சிவப்பிரகாச சுவாமிகள். அவருக்கு பின் வேலாயுதம், கருணைப்பிரகாசம், ஞானாம்பிகை என்ற மூவர் பிறந்தனர். இவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கும்போதே தந்தை யார் இறந்து விட்டார். தனது தம்பிமார்களுடன் திருவண்ணாமலைக்கு சென்றார். சிவப்பிரகாசம் அங்கு கிரிவலத்தின் பெருமையை தனது அருளுணர்வால் உணர்ந்தார். ஒரு தடவை கிரிவலத்தின் போது ஈசனை நினைந்து நூறு பாடல்களை பாடினார். அதுவே, சோணாசலமாலை என்ற தொகுப்பாகியது. சுவாமிகள் மேலும் கல்வி பயில அவா கொண்டு தமது சகோதரர்களுடன் தென்னக பிரயாணத்தை மேற்கொண்டார்.
அப்போது தாமிரபரணி ஆற்றுக்கருகில் ஆட்சி செய்து வந்த தருமபுரத்து ஆதீன கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகள் உயர்கல்வி கற்றவர் என்பதை அறிந்து அவரிடம் மாணாக்கராக சேர சிவப்பிரகாச சுவாமிகள் விரும்பினார். அவரோ, சுவாமியை மாணாக்கராக சேர்ப்பதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது கு என்ற எழுத்தில் தொடங்கி அதே எழுத்தில் முடியும் வகையிலும், இடையில் ஊரடையான் என்ற சொல் வரும் வண்ணமும் நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு கேட்டார். சற்றும் தயங்காமல் பாடலை பாடினார். சுவாமிகள்.
குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் றெவ்வாக்குத் தில்லைதோன் மேற்கொள்ள
லூருடையீர்னென்னு மூலகு
வெண்பாவை கேட்டவுடன் வெள்ளியம்பல சுவாமிகள் சிவப்பிரகாசரை கட்டிக் கொண்டார். உமக்கே இவ்வளவு ஆற்றல் உள்ளதே... உனக்கா நான் தமிழ் கற்றுத் தர வேண்டும்? என்று வியந்து கேட்டார். தொடர்ந்து சுவாமிகளின் சகோதரர்கள் இருவருக்கும் பதினைந்தே நாட்களில் தமிழ் கற்றுத் தந்தார். தனது பக்தர் ஒருவர் கொடுத்த பெரும் பொருளை குரு தட்சணையாக வெள்ளியம் பல சுவாமிகளின் காலடியில் வைத்தார் சிவப்பிரகாசர். இவை எனக்கு வேண்டா அதற்கு பதிலாக திருச்செந்தூரில் அகங்கார புலவன் ஒருவன் இருக்கிறான். அவனை அடக்குவதே நீ எனக்காக அளிக்கும் குரு காணிக்கை என்றார் வெள்ளியம்பல சுவாமிகள். சுவாமிகள் திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கினார். அவனை மனத்தில் இருத்தி உள்ளாழ்ந்து ஒருமித்து வணங்கி அவனுடனேயே ஒன்றினார். பின் கோயிலை வலம் வந்தார். வழியில் குருநாதர் குறிப்பிட்ட அகங்கார புலவன் எதிர்ப்பட்டான். உடனே அவன் தன் வாயில் வந்த வார்த்தைகளால் சுவாமியை அர்ச்சனை செய்தான் இருவருக்கும் வார்த்தை முற்றியது.
பந்தயம் கட்டி சுவாமிகளை அழைத்தான். நாம் இரண்டு பேரும் நீரோட்ட கயமகம் பாட வேண்டும். யார் முதலில் முப்பது பாட்டை பாடி முடிக்கிறார்களோ அவருக்கு அடுத்தவர் அடிமையாக வேண்டும். என்பது நிபந்தனை நீரோட்ட கயமகம் பாடுவது மிகவும் கஷ்டமான ஒன்று. மிகவும் தேர்ந்தவர்கள் மட்டுமே பாடமுடியும். இது நான்கு வரிகளைக் கொண்டது. பாடும்போது உதடுகள் ஒட்டக்கூடாது. ஊ, ஓ, ப, ம, வ போன்ற எழுத்துக்கள் இடம் பெறக்கூடாது. அந்தாதிக்குள்ள இலக்கணமும் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த செய்யுட்களை அகங்கார புலவன் முற்றிலும் அறியாதவன். புலவரும் அதனை அறிந்திருக்க மாட்டார். என்று நினைத்தே அகங்கார புலவன் அவரை பந்தயத்திற்கு அழைத்தான். சுவாமிகள் ஒப்புக்கொண்டார் கடகட வென்று முப்பது பாடல்களை பாடினார். சுவாமிகள் பாடியதும் அவன் விழித்தான். தன் செயலை நினைத்து வெட்கினான். தனது அகங்காரம் அழிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான். இதனைக் கேட்டு, சுவாமிகளின் குருநாதர் பேருவகை கொண்டார். பரம்பொருளிடத்தில் அவன் கவனம் செலுத்த ஆசி வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சுற்றித் திரிந்து சுவாமிகள் விருத்தாசலத்தை வந்தடைந்தார். அங்கு வீற்றிருக்கும் பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தினந்தோறும் வணங்கினார். பழமலை, அந்தாதி, நம மணிமாலை, கொச்ச கலிப்பா, பெரிய நாயகிம்மை நெடுங்கழி நெடியலாசிரிய விருத்தம், பெரிய நாயகிம்மைக் கட்டளை, கலித்துறை போன்ற நூல்களை அருளினார். தனக்கு இல்லற வாழ்வில் விருப்பம் இல்லாவிட்டாலும் தனது சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். பின்னர் புதுவைக்கு வந்தார். அங்குள்ள சிவத்தலங்களை வணங்கினார். அங்கே சாந்த லிங்க சாமிகளை சந்தித்தார். இருவரும் பொம்மையாள் பாளையம் சிவஞான பாளைய சாமிகளை சந்திக்க சென்றனர். வழியில் சிவஞான பாளைய சாமிகளை பற்றி பாடல் ஒன்று பாடுமாறு சிவப்பிரகாசரை சாந்தலிங்கர் கேட்டார். இறைவனை பாடும் நாவால் மனிதனை பாடமாட்டேன் எனக் கூறி சிவப்பிரகாச சாமிகள் மறுத்துவிட்டார்.
அன்று இரவு சிவப்பிரகாசரின் கனவில் மயில் வாகனத்தோடு முருகன் காட்சியளித்தான். நிறைய பூக்களை கொடுத்து. இதை மாலையாக்கி காலையில் எனக்கு சூட்டு ... எனப் பணித்தான். சிவஞான பாளைய சாமிகளுக்கு பாமாலை சூட்டச் சொல்லி முருகன் சூசகமாக சொல்வதை சாமிகள் உணர்ந்தார். அவரையே ஞானாசிரியராக ஏற்று தாலாட்டு, நெஞ்சு விடு தூது ஆகிய இரு பிரபந்தங்களை அவர் முன் அரங்கேற்றினார். சிவப்பிரகாசரின் ஆத்ம சாதனை தீவிர வேகம் கொள்ள ஆரம்பித்தது. தற்போது வில்லியனூர் என்று அழைக்கப்படும். வில்வராண்யம் என்ற ஊருக்கு வந்தார். அங்குள்ள சிவனையும் வணங்கினார். அப்போதும் அந்த ஊரில் எங்கு பார்த்தாலும் வில்வ மரங்கள் அடர்ந்திருந்தன. பின் அங்கிருந்து நல்லாற்றூர் என்ற ஊருக்கு வந்தார். வில்லியனூருக்கு மிக அருகில் உள்ள ஊர்தான் அது!
கள்ளிக்காடுகளும் நுணா மரங்களும் அடர்ந்த காடாக அவ்வூர் இருந்தது. அங்கும் சிவன் கோயில் கொண்டிருந்தார். அந்த ஊரில் உள்ள நுணா மரத்தின் கீழே அமர்ந்து தினந்தோறும் தவம் மேற்கொண்டார். அதிகாலை 3 மணிக்கு எழுந்து நல்லாற்றூரிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டார். பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்த சுவாமிகளின் எண்ணம் ஈடேறும் நாள் வந்தது. சிவன்கோயில்களுக்கு சென்று சிவதரிசனம் புரிந்த சுவாமிகள் தாமே சிவமாகும் நிலையை உணர்ந்தார். உடல்சூட்டில் உயிர் இருப்பது வீண் என்று உணர்ந்தார். புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில் பரம்பொருளோடு ஐக்கியமானார். அவர் தினந்தோறும் தவம் புரிந்த நுணா மரத்தின் அடியிலேயே சமாதி அடைந்தார். தனது 32 ஆண்டு கால பூவுலக வாழ்வில் அவர் 32 நூல்களை எழுதியுள்ளார் என்பது ஆன்மீகர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தி.
காஞ்சிபுரத்தில் சைவ வேளாள குலத்தில் குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர், சிவப்பிரகாச சுவாமிகள். உடன்பிறந்தோர் வேலய்யர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை. பல்வேறு அருட்செயல்களை, சித்துக்களைச் செய்த மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆதி பாலய சுவாமிகளின் முதன்மைச் சீடராக விளங்கியவர் நல்லாத்தூர், துறைமங்கலம், கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள். சிவப்பிரகாசர் திருவண்ணாமலை, திருச்செந்தூர், சிதம்பரம், கூவம், பழலை, திருவெங்கை, துறைமங்கலம் முதலிய தலங்களிலுள்ள இறைவனை வழிபட்டுள்ளார். அண்ணாமலையார் மேல் அளவற்ற பற்றுக் கொண்ட அவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு திருவண்ணாமலை சென்று தங்கியிருந்தார். ஒருநாள் திருவண்ணாமலையை வலம் வரும்போது அண்ணாமலையாரைப் போற்றி துதித்தார். அதுதான் சோணசைல மாலை. பின்னர் லிங்கா ரெட்டியார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கிணங்க துறைமங்கலம் சென்று அங்கேயே தங்கி மடம் அமைத்தார். லிங்கா ரெட்டியாரின் மறைவுக்குப் பிறகு அண்ணாமலை ரெட்டியார் என்பவர் சிவப்பிரகாசரின் சீடராகி, அவரை ஆதரித்து வழிபட்டார்.
திருச்செந்தூர் சென்ற சுவாமிகள், முருகப் பெருமானைப் தரிசித்துவிட்டு வலம்வரும்போது பந்தயத்திற்கு அழைத்த ஒரு புலவரை பாடல்கள் பாடி அடக்கினார். மீண்டும் துறைமங்கலம் திரும்பிய சுவாமிகள், பக்கத்து ஊரான வெங்கனூர் பழமலைநாதர் மேல் திருசெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா, திருவெங்கை அலங்காரம் போன்ற நூல்களை இயற்றினார். பின்னர் சுவாமிகள் சிதம்பரம் சென்று சிவப்பிரகாச விசாகம், தருக்க பரிபாஷை, சத மணி மாலை, நால்வர் நான்மணிமாலை போன்ற நூல்களை இயற்றினார். சிதம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பேரூர் சாந்தலிங்க சுவாமியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. சாந்தலிங்க சுவாமிகள் மூலம் பொம்மபுர சிவஞான பாலய தேசிகர் பற்றி அறிந்து அங்கு சென்று அவரை தரிசித்தார். சிவப்பிரகாசர் புதுச்சேரியில் அடுத்துள்ள பொம்மபுர திருமடத்தில் தங்கியிருந்தபோது கடற்கரை மணற்பரப்பில் நன்னெறி வெண்பாக்களை விரலால் எழுதினார். இதை தன் இளவல் கருணைப்பிரகாசரை எழுதிவரும்படி கூறினார். அதுவரை, மானிடரைப் பாடேல் என்றிருந்த சுவாமிகள், மயிலம் முருகப்பெருமானின் ஆணைப்படி சிவஞான பாலய ஞானதேசிகரை குருவாகக் கொண்டார்.
அவர் மீது நெஞ்சு விடு தூது, தாலாட்டு, பிள்ளைத் தமிழ், கலம்பகம், திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றை எழுதினார், அதற்குப் பிறகு சாந்தலிங்கருக்கு தன் கங்கை ஞானாம்பிகையை மணம் முடித்துக் கொடுத்தார். பின்னர் காஞ்சிபுரம் சென்று வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை ஆகிய வடமொழி நூல்களை தமிழாக்கம் செய்தார். அதன்பிறகு விருத்தாசலம் சென்றடைந்து பழமலை அந்தாதி, பிட்சாடன நவமணி மாலை முதலிய ஐந்து நூல்களை இயற்றினார். நல்லாத்தூர் திருமடத்தில் தங்கியிருந்தபோது சிவநாம மகிமை, அபிஷேகமாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தலமாலை, கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்கம் ஆகியவற்றை இயற்றினார், மொத்தம் 34 நூல்களை இயற்றி, தமிழ் உலகில் கற்பனைக் களஞ்சியம் என்று அழியாப் புகழ்பெற்ற சுவாமிகள் இறுதியில் நல்லாத்தூரில் முப்பத்திரண்டாம் வயதில் புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி திதியில் சிவயோக சமாதியடைந்தார். இவர் சமாதி பாண்டிசேரி பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில், கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் சிவப்பிரகாச சுவாமிகளின் சமாதி கோயில் அமைந்துள்ளது. சமாதியில் மயிலம் ஆதீனம் 19-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகளால் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆதீனத்தின் சார்பில் தினசரி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வழிபாடு செய்வோர்க்கு மன அமைதி கிட்டுவதோடு நோய் நொடிகள் நீங்குகின்றன என்கிறார்கள்.