பதிவு செய்த நாள்
29
ஜன
2013
10:01
பழநி: பழநியில் பாதயாத்திரைக்கு உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா ஜன.21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை தெப்ப உற்சவத்துடன் 10 நாள் திருவிழா நிறைவடைய உள்ள நிலையில், நேற்று முதல் மின்தடை அமல்படுத்தப்பட்டது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெறும் விழாவில், முத்துகுமராசுவாமி, வள்ளிதேவசேனா சமேதமாக காலை 9 மணிக்கு மேல் தந்தப்பல்லக்கில் திருவுலா வருகிறார். இரவு 7.30 மணிக்கு ஆட்டுகிடா, வெள்ளிக்காமதேனு, தங்க குதிரை வாகனம் உட்பட வாகனங்களில் ரதவீதி உலா வருதல் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தைப்பூசதேரோட்டம் கோலாகலமாக நடந்தது.நேற்று இரவு 8மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
தங்க மயில்: விழாவின் 9-ம்நாளான இன்று காலை 9 மணிக்கு முத்துகுமார சுவாமி புதுச்சேரி சப்பரத்தில் திருவுலா வந்து, பெரியநாயகியம்மன் கோயில் துறையூர் மண்டபத்தில் எழுந்தருகிறார். இரவு 9 மணிக்கு மேல் பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி ரதவீதி திருவுலா வருதல் நடைபெறுகிறது.
விழாவின் பத்தாம் நாளான ஜன.,30ல் (நாளை), காலை 9.15 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள், தெப்போற்ச விழா நடைபெறவுள்ளது. இரவு 11.30 மணியளவில் கொடி இறக்குதலுடன் விழா தைப்பூச விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்துள்ளார்.
நிறைவேறாத அறிவிப்பு: பழநி தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால் நேற்று முதல் வழக்கம் போல், மின்தடை ஏற்பட்டது.இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்," தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்துவிட்டது. மின்சாரம் பற்றாக்குறை காரணமாக நேற்று முதல் மின்தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.