பதிவு செய்த நாள்
31
ஜன
2013
11:01
திருவனந்தபுரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, பத்மநாபசுவாமி கோவில் நகைகள் மதிப்பீடு பணிகளை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிப்பது சிரமம் என கூறப்படுகிறது.கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பாதாள அறை நகைகளை மதிப்பீடு செய்ய, உயர்மட்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்குழு, தங்க, வைர, வெள்ளி, ரத்தின நகைகளை மதிப்பீடு செய்து வருகிறது.ரத்தினங்களை மதிப்பீடு செய்ய, இரு வல்லுனர்கள் மட்டுமே உள்ளனர். வெளிநாட்டு வல்லுனர்களும், இவர்களுக்கு உதவி வருகின்றனர்.எனினும், ரத்தினங்கள் பதித்த நகைகளின் மதிப்பீடு பணிகள், உயர்மட்ட குழுவுக்கு பெரும் சவாலாக உள்ளது. ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க சங்கிலிகள், விக்ரகங்கள், பூஜை பொருட்கள் போன்றவற்றை சோதித்து, மதிப்பீடு செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.ஒவ்வொரு பொருளிலும் உள்ள ரத்தினங்களின் எடை, மதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது.மதிப்பீடு பணிகளை, ஒன்பது மாதங்களில் முடிக்க, சுப்ரீம் கோர்ட் கெடு விதித் துள்ளது. ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள எட்டு மாதங்களில் மதிப்பீடு பணிகளை முடிப்பது சிரமம் என கூறப்படுகிறது. எனவே, கூடுதல் கால அவகாசம் கோருவதை தவிர, உயர் மட்ட குழுவுக்கு வேறு வழியில்லை.இது குறித்து, பிப்ரவரி, 4ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.