வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் திருக்கல்யாணத்துடன் பிரமோத்ஸவம் நிறைவு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2026 05:08
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் திருக்கல்யாணத்துடன் பிரேமாத்ஸவம் நிறைவடைந்தது.
நகரத்தார் கோயிலான இங்கு ஆடி மாதத்தில் பிரமோத்ஸவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. ஆக.6ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினசரி தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளில் வயிரவருக்கு தேரோட்டம் நடந்தது. பத்தாம் திருநாளில் காலையில் தீர்த்தவாரியும்,இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளலும் நடந்தது.
இன்று பதினொராம் நிறைவு நாளில் காலை 9:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்களுக்கும்,வயிரவசுவாமிக்கும் மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வளரொளிநாதர்,வடிவுடையம்மை மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினர். யாகசாலையில் சிவாச்சார்யர்களால் பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் மாலை மாற்றுதல், பட்டு சாற்றும் நிகழ்வுகள் நடந்தன. பின்னர் சுவாமியும்,அம்பாளும் திருப்பூட்டு வைபவம் நடந்தது. சுமங்கலிப் பெண்கள் சுவாமிக்கு ஆரத்தி எடுத்தனர். பின்னர் இரவு 9:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்களும் திருவீதி வலம் வந்து பிரமோத்ஸவம் நிறைவடைந்தது.