பதிவு செய்த நாள்
04
பிப்
2013
10:02
அலகாபாத்: மகா கும்பமேளா, புனித நீராடலுக்காக, கங்கை நதிக்கரையில், லட்சக்கணக்கான சாதுக்கள் குவிந்துள்ள நிலையில், அலகாபாத் நகரில் வசிக்கும் முதியோருக்கும், புனித நீராட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில், கும்பமேளா நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசம் அலகாபாத் நகரில், கங்கை நதிக்கரையில், மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் பங்கேற்று, கங்கை நதியில் புனித நீராட, நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான சாதுக்களும், சாதாரண பக்தர்களும், அங்கு குவிந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை, கும்பமேளா கமிட்டி செய்து வருகிறது. அதே நேரத்தில், அலகாபாத் நகரில் வசிக்கும் மக்களும், கும்பமேளாவில் பங்கேற்கின்றனர். அவர்களில், வயதானவர்களால், கூட்ட நெரிசலில், நதியில் நீராட முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகையவர்களின் சிரமத்தை போக்குவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலகாபாத் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், மகா கும்பமேளா கமிட்டிக்கு, தகவல் தெரிவித்தால் போதும், ஊர் காவல் படை வீரர்கள், முதியோர் வசிக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை வாகனங்களில் ஏற்றி, நீராட வைத்து, மீண்டும் அவர்களின் வீடுகளில் கொண்டு விடுகின்றனர். ""இதற்காக கட்டணம் எதையும் வாங்குவதில்லை. எனினும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், இத்தகைய வசதியை முதியோருக்கு அளிக்க முடியாது, என, ஊர் காவல் படை ஏ.டி.ஜி.பி., பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ""மாநிலத்தில், 1.18 லட்சம் ஊர் காவல் படை வீரர்கள் உள்ளனர். அவர்களில், 4,500 வீரர்கள், கும்பமேளாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என்றார்.