பதிவு செய்த நாள்
04
பிப்
2013
10:02
பழநி: பழநியில் தைப்பூச திருவிழாவின் போது, தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட், பஞ்சாமிர்தம் விற்பனை மூலம், 5 கோடி ரூபாயை எட்டியது. தைப்பூச விழாவில் தரிசனத்திற்கான, 20 ரூபாய், 200 ரூபாய் டிக்கெட்டுகள் விற்பனை மூலம், 2.48 கோடி ரூபாயும், பஞ்சாமிர்த விற்பனை மூலம், 1.47 கோடி ரூபாயும் வசூலாகியது. தங்கரத புறப்பாடு, காலப்பூஜை தரிசனம், ரோப்கார், வின்ச், முடி காணிக்கை, தங்கும் விடுதிகள், அர்ச்சனை, அபிஷேக டிக்கெட்டுகள் விற்பனையையும் சேர்த்து வருவாய் மொத்தம் 5 கோடி ரூபாயை எட்டியது. இதில் உண்டியல் வசூல் சேர்க்கப்படவில்லை. கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது: தைப்பூச வருவாய் கடந்த ஆண்டை விட, 2 கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. ஜூலையில் இருந்து, இந்த ஆண்டு ஜனவரி வரை, பஞ்சாமிர்த விற்பனை, 17.42 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட, 1.82 கோடி ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் அதிகம் விற்றுள்ளது. பஞ்சாமிர்தம் தயாரிக்க தற்போது மலை வாழை, கற்பூரவள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின் தடை காரணமாக பஞ்சாமிர்தத்தை நிரப்ப பயன்படும் டப்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, பெங்களூருவில் இருந்து டப்பாக்கள் வரவழைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.