பதிவு செய்த நாள்
07
பிப்
2013
12:02
சேலம்: அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமசாமி கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில், நூற்றாண்டு கால பழமை வாய்ந்த, கோதண்டராமசாமி கோவில் உள்ளது. கோவிலில் இன்று அதிகாலை, 5.50 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 7.30 மணிக்கு, 32 ஆச்சார்யார்கள் மூலம் புண்ணியாகம், அக்னிப்பிரணயம், நித்ய ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது. காலை, 8.30 மணிக்கு இதிகாச, பிபந்தர சாற்று முறை நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை, 9 மணியில் இருந்து, 9.30 மணிக்குள், புண்ணயதீர்த்தங்களால், அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜை செய்து கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, மூலவர் கோபுரம், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், முன் மண்டப ஆஞ்சநேயர் கோவில் கோபுர கலசங்களுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வடபுறம், பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையிலான, பல்வேறு புனித ஸ்தலங்களை சேர்ந்த பட்டாச்சார்யார்கள், கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்து, இரவு, 9 மணிக்கு சுவாமிகள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. கோவில்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த காரிப்பட்டி போலீஸார் தலைமையில், 200 க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைச்சர்கள் இடைப்பாடி பழனிசாமி, ஆனந்தன், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர்.