கொதிக்க, கொதிக்க பிடிக்கப்பட்ட பச்சரிசி சோறு உருண்டையுடன்ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 04:10
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே தர்மத்துப்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவை கிராமத்து மக்கள் பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு நாள் இரவு மட்டும் நடக்கும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். முதல் நிகழ்வாக ஊர் முதன்மைக்காரர்கள் பொங்கல் வைத்து கருப்பணசாமியை வழிபட்ட பின்பு சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பாரம்பரிய வழக்கப்படி பச்சரிசியில் உணவு சமைக்கப்பட்டு அவை அனைத்தும் கொதிக்க, கொதிக்க உருண்டையாக பிடிக்கப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. பலியிடப்பட்ட ஆடுகள் சமைக்கப்பட்டு கறி விருந்துக்கு தயார் செய்யப்பட்டன. சிறப்பு பூஜைக்கு பின் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பச்சரிசி உருண்டையும், சுடச்சுட கறியும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு தொடங்கி விடிய விடிய நடந்த இந்த திருவிழா கறி விருந்தில் வத்தலக்குண்டு, விருவீடு, உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.