திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா ; கிராமத்தினருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து அழைப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 03:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 9ல் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா நடக்கிறது. அவ்விழாவில் பங்கேற்க கிராமத்தினர், ஊரின் முக்கியஸ்தர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து அழைக்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.
கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படும் இந்த விழாவில் அக். 9 அன்று மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் உள்ள சுனை தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான திரவிய அபிஷேகங்கள் செய்யப்படும். அங்குள்ள குமாரர் ( சுப்ரமணியர்) கரத்தில் வேல் சாத்துப்படி செய்யப்படும். பின்பு அங்கு எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், வேலுக்கு பூஜை, தீபாராதனை முடிந்து கிராம மக்கள் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். மாலையில் வேல் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்க்கப்பட்டு சிறப்பு பூஜை முடிந்து பல்லக்கில் வேல் ரத வீதிகளில் உலா சென்று கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்க்கப்படும்.
வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு: இந்த விழாவில் பங்கேற்க ஊரின் முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சாமிநாதன் தலைமையில் கிராமத்தினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம், முக்கியஸ்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுத்தனர். கிராம மக்கள் கூறியதாவது: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் கோயில் சார்பில் நடத்தப்படும். மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா மட்டும் கிராமத்தினர் சார்பில் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராம மக்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.