மின்னல் தாக்கி பிரபல திருவிழா யானை பல்லாட்டு பிரம்மதத்தன் உயிரிழப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 05:10
பாலக்காடு: கேரளாவின் கோவில் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘பல்லாட்டு பிரம்மதத்தன்’ 54, என்ற வளர்ப்பு யானை, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது.
மதம் பிடித்த காலத்திற்குப் பிறகு, கடந்த ஒரு மாதமாக அதன் உரிமையாளரான கேரள மாநிலம் ஈராற்றுபேட்டை மேலம்பாறையைச் சேர்ந்த ராஜேஷ் பல்லாட்டு என்பவரது வீட்டின் அருகேயுள்ள ஷெட்டில் பிரம்மதத்தன் யானை ஓய்வெடுத்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அப்பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது தாக்கிய மின்னல், ஷெட் மற்றும் யானையின் மீது பாய்ந்ததில் அது சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்தது. தொடக்கத்தில் அருணாச்சலப் பிரதேசக் காடுகளில் கும்கி யானையாக இருந்த பிரம்மதத்தனை, 28 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயம் புதுப்பள்ளியைச் சேர்ந்த சகோதரர்களான போத்தன் வர்கீஸ் மற்றும் சாக்கோ ஆகியோர் கேரளாவுக்குக் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் புதுப்பள்ளி பிரம்மதத்தன் என்று அழைக்கப்பட்ட இந்த யானை, 16 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் பல்லாட்டிடம் கைமாறிய பின்னர் பல்லாட்டு பிரம்மதத்தன் எனப் புகழ்பெற்றது.
சுமார் 10 அடி 2 அங்குல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்ட பிரம்மதத்தன் யானை, கேரளாவின் முக்கிய திருவிழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தது. குறிப்பாக, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரத் திருவிழாவில் பாரமேக்காவு பகவதியின் ஊர்வலத்தில் பங்கேற்றதுடன், அன்றிரவு நடைபெற்ற பூரத்தில் மூலவரின் திருவுருவ சிலையை தலையில் சுமந்து சென்று லட்சக்கணக்கான பக்தர்களின் கவனத்தை ஈர்த்த பெருமைக்குரியது. கம்பீர நடைக்கும் சாதுவான குணத்திற்கும் பெயர்போன பல்லாட்டு பிரம்மதத்தனின் மறைவு, கேரள யானை பிரியர்களிடையேயும் திருவிழாக் குழுவினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.