புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மாரியூரில், அறந்தாங்கி அரசுக்கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவரும், தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இங்கு, 11ம் நுாற்றாண்டில் உள்ள பெருமாள்கோவில் சிதலமடைந்த நிலையில், இருப்பதை கண்டறிந்தனர்.
அவர் கூறியதாவது: பெருமாள் நின்ற கோலத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் பட்டுப்பீதாம்பரம் உடுத்தி, காதணி முப்புரிநுால் அணிந்து, சங்குச்சக்கரம் ஏந்தி பொன்னும் மணியும் பதித்த நீள்கிரீடம் அணிந்து, அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். இந்த சிலையில் பெருமாளின் கை உடைபட்டுள்ளது. ஸ்ரீதேவி இடக்கையில் பாரிஜாதமலரை கொண்டும், உடல் தெரியும்படியான ஆடையையும் அணிந்து, கழுத்தணி காதணிகளுடன் நீள்கிரீடம் அணிந்து நின்ற கோலத்துடனும், பூதேவி கையில் தாமரை மலர் கொண்டு, கழுத்தணி காதணிகளுடன் நீள்கிரீடத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இவ்வூர் மக்கள் இதனைக் குறவன் குறத்தி கோவில் என, அழைத்து வருகின்றனர். சிலைகளின் தோற்றத்தையும், அணிகலன் அமைப்பையும் பார்த்தால் பல்லவர் காலப்பாணியில் அமைந்தது போல் தோன்றும். வைணவ பக்தி கொண்ட கருணாகர தொண்டமானார், 11ம் நுாற்றாண்டில் இக்கோவில் கட்டியதாக கொள்ளலாம். சமய சண்டைகளாலும், அரசு மாற்றங்களாலும் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.