வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் பரிதவிப்பு
பதிவு செய்த நாள்
14
நவ 2026 10:11
வடபழனி முருகன் கோவிலில், மகா கந்த சஷ்டி விழா நடந்து வரும் நிலையில், பிரதான நுழைவாயில் சாலை மற்றும் முகப்பு பகுதியில் நடைபாதை ஆக்கிமிப்பால், பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கந்த கஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நாளை நடக்க உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால், சம்பந்தப்பட்ட துறையினர், சாலையை ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிகை விடுத்துள்ளனர். சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற, நுாற்றாண்டு பழமை வாய்ந்தது வடபழனி முருகன் கோவில். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகள் நடைபாதை மற்றும் சாலையில் பூ, மாலை, தேங்காய் விற்பனை கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. மேலும், பலர் சாலையையே ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர். சில உணவு விடுதிகள், காஸ் சிலிண்டர்களை ஆபத்தான முறையில் நடைபாதையில் வைத்து சமைக்கின்றனர். பகல் நேரங்களிலும் சரக்கு இறக்கும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. பக்தர்களை இறக்கிவிட வரும் வாகனங்களும் அடுத்த சவாரிக்காக ஓரம் கட்டி நிறுத்தப்படுகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிற்பதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, மகா கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, ஆக்கிரமிப்பு கடைகள் இருமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கடை நடத்துபவர்களே பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடைவதே மிகவும் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. கலெக்டர் ஆலோசனை: வடபழனி முருகப்பெருமான் கோவில் மகா கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், கந்த சஷ்டி விழா நடத்தும் முன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை, மாநகராட்சி, காவல், போக்குவரத்து, தீயணைப்பு, குடிநீர் வாரியம், மின்வாரியம், சுகாதாரத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். வடபழனி கோவில் துணைக் கமிஷனர் சித்ராதேவி விழாவிற்கு தேவைப்படும் அனைத்து விதமான பணிகளையும், ஒவ்வொரு துறை வாரியாக மிக விளக்கமாக எடுத்து கூறினார். கலெக்டர் மாலதி ெஹலன் பேசுகையில், ‘விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு துறையும், கோவிலோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எந்தவிதமான அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் நடக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டார். ஆனால், மாநகராட்சி, போக்குவரத்து மற்றும் காவல்துறையினர், கலெக்டரிடம் உத்தரவை புறம்தள்ளி மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றன என்பது, இந்த ஆக்கிரமிப்பின் வாயிலாக தெரியவருகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: ஆண்டவர் தெருவில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணம், ஆளும் கட்சியினரின் ஆசி மற்றும் துறையினர் தினசரியாகவும், மாதா மாதம் மாமுல் பெறுவதுதான். இதன் காரணமாகவே, ‘ஆக்கிரமிப்பாளர்கள் யார் வந்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்ற மனப்போக்குடன் நடக்கின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற நிரந்தர வழி: வடபழனி முருகன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்ற காவல்துறை, போக்குவரத்து போலீசார், மாநகராட்சியினர், வார்டு கவுன்சிலர், கோவில் நிர்வாகம் என அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு செய்ய வேண்டும். ஆற்காடு சாலையில் இருந்து, முருகன் கோவில் முகப்பு வரை பாதசாரிகள், பக்தர்கள் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். நாளை கந்த சஷ்டி பெருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வு நடக்கும் நிலையில், இன்று சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|