திருப்பூர்: திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீபவிழாவில், அன்னதான சேவையில் பங்கேற்க விரும்பும் சேவார்த்திகள் முன்வரலாம் என, அன்னம்பாலிப்பு குழு அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை அன்னம்பாலிப்பு குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்கள் வசதிக்காகவும், பொதுமக்கள் நலன்கருதியும், 16 திருமண மண்டபங்களில், 44 ஆண்டு தீபவிழா அன்னதானம் வழங்கப்படுகிறது; 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இச்சேவை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட பக்தர்கள் பங்களிப்பாக, ஆண்டுதோறும், ஐந்து டன் காய்கறிகள், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், நன்கொடையாக பெற்று, சேவா காரியத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அன்னதானத்துக்கு, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்க விரும்பும் பக்தர்கள், 19 ம் தேதி இரவுக்குள் வழங்கலாம். ஆண்டு தோறும், 500க்கும் அதிகமான தன்னார்வலர்கள், திருப்பூரில் இருந்து அழைத்துச்சென்று, மண்டபங்களில் தங்கி, அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீப திருவிழாவில், தன்னார்வலராக பங்கேற்று, அன்னதான பணியில் சேவையாற்ற, தன்னார்வலர்கள் முன்வரலாம். மேலும் விவரங்களுக்கு, 98430 66767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.