பதிவு செய்த நாள்
12
பிப்
2013
04:02
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி கோவில், நிர்வாக சீர்கேட்டால், சிக்கித் தவிக்கிறது. நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான, இக்கோவிலுக்கு, நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் நேரடி பார்வையில், கோவில் சுத்தமாகவும், தினமும் பூஜைகளும் முறைப்படி நடந்தது. தற்போது, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கோவிலில், 110 பேர் பணியாற்றுகின்றனர்.குருக்கள்கள், பணியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனித்தனியே சங்கங்கள் தொடங்கி சம்பள உயர்வு கோரி போராடி வருகின்றனர். இதனால், கோவிலில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால், தருமபுரம் ஆதீனகர்த்தர், கோவிலுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். இதனால், பணியாளர்கள், பெயரளவிற்கு பணியாற்றுகின்றனர். கோவிலில் நடக்கும் திருமணம், காது குத்து நிகழ்ச்சிகளின் போது, போடப்படும் குப்பை முழுமையாக அகற்றப்படாமல், குவிந்து கிடக்கிறது.கோவில் மண்டபங்களில் வெற்றிலை, பாக்கு, பான்பராக் எச்சில் துப்பப்பட்டிருப்பதை கண்டு, பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
சுவாமிக்கு, சித்தர்கள் அமிர்தத்தை அபிஷேகம் செய்தபோது, அமிர்தம் குளத்தில் கலந்ததால், சித்தாமிர்த தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம், தற்போது பாசி நிறைந்து, பக்தர்கள் நீராட முடியாத நிலையில் உள்ளது.கோவிலுக்கு வரும் சிலரை, தங்களது வாடிக்கையாளர்களாக பாவிக்கும் குருக்கள், அவர்களை சன்னதியின் முன் நிறுத்துவதால், மற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன உளைச்சலுடன் செல்கின்றனர்.
இது குறித்து, பக்தர் ஒருவர் கூறியதாவது:தருமபுரம் ஆதீனகர்த்தர் கோவிலுக்கு வராததால், நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது. குப்பைகளும், எச்சிலுமாய் காணப்படுகிறது. பக்தர்கள் மன நிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதைபோக்க, கோவில் நிர்வாகத்தை, தருமபுரம் ஆதீனம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.இல்லை என்றால், இந்து சமய அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தை ஏற்று நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.