பதிவு செய்த நாள்
16
நவ
2026
12:11
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கண் கவரும் வகையில் பல வண்ணங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி பவுர்ணமியன்று தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று கோவில்கள் மற்றும் வீடுகளிலும் பொதுமக்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வர். இதற்காக, விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி, மேலமங்கலம், தென்மங்கலம், சாலை அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென்னமாதேவியில் சுடுமண் சிற்ப குழுவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் 50க்கும் மேற்பட்ட ரகங்களை கண்களை கவரும் வகையில் அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.
இங்கு, ஒரு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு திரி முதல் 5 திரி விளக்குகள், மேஜிக் லேம்ப், ரெயின்போ விளக்குகள், ஹாங்கிங் டூம் லாம்ப், தட்டு துாம் லாம்ப், குபேர விளக்கு, கலச விளக்கு, வேல் அகல் போன்று பல ரகங்களில் விளக்குகள் தயார்செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, கோயம்புத்துார், சென்னை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.