பதிவு செய்த நாள்
16
நவ
2026
02:11
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உள்ள ஆளவந்தார் திருவரசு கோவில் புனரமைப்பு பணிகள், மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருவதால், கும்பாபிஷேகம் நடத்துவது எப்போது என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆளவந்தார் திருவரசு கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை ஆளவந்தார் அறக்கட்டளை இயக்கி வருகிறது. சொந்தமாக, 1,054 ஏக்கர் நிலம், மாமல்லபுரம் – நெம்மேலி இடையே கடலோர பகுதியில் உள்ளது.
மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் என்பவருக்கு சொந்தமாக, 1,500 ஏக்கர் நிலம் இருந்தது. இந்நிலத்தை பலர் அபகரிக்க முயற்சித்தனர்.
அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நாளடைவில் ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட தேவைகளுக்கு, நிலம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது 1,054 ஏக்கர் நிலம் உள்ளது. நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் நினைவிடத்தில், ஆளவந்தார் கற்சிலையுடன், கடந்த 1967ல் திருவரசு கோவில் அமைக்கப்பட்டது.
அங்கு ஆண்டுதோறும் ஆடி மாத பூரட்டாதி நட்சத்திர நாளில், அறக்கட்டளை சார்பில் குரு பூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோவில் பாழடைந்த நிலையில், கடற்காற்று பாதிக்காதவாறு புதிய கற்கோவில் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆளவந்தார் திருவரசு கற்கோவில் அமைக்க 84 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அங்குள்ள தாமரை புஷ்கரணி குளத்தை துார்வாரி சீரமைக்க 27.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த 2023ல் பாலாலயம் நடத்தப்பட்டு, பழைய கோவில் இடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கருங்கற்களில் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி மூன்றாண்டுகளாக மந்தகதி யில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த, அறக்கட்டளை நிர்வாகம் முடிவெடுத்தது. கோவில் கட்டுமான பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து, வரும் ஜன., மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ளதாக, அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.