மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு: தினமும் 80,000 பக்தர்களுக்கு அனுமதி1
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2026 04:11
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
இங்கு இன்று மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் வழியாக இறங்கிவந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். தொடர்ந்து இருமுடி கட்டுடன் 18 படிகளின் கீழே நின்று கொண்டிருக்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - சுப்ரமணியன் நம்பூதிரி, மாளிகைபுறம் - தாமோதரன் நம்பூதிரி ஆகியோரை சன்னிதானம் முன்புறம் அழைத்து வருவார். இவர்களுக்கு தந்திரி பிரம்ம தத்தன் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார். இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி சுப்பிரமணியன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 40 நாட்கள் பூஜைகள் நடைபெற்று 41-வது நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. எல்லா நாட்களிலும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் உண்டு. பக்தர்கள் படியேறுவதை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் படி பூஜை கிடையாது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தினமும் அதிகபட்சம் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மேற்கொண்டுள்ளது.