கடந்த 10-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய விழாவில், தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையை மணந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருமாங்கல்யம், மலர்கள், பிரசாதம் வழங்கப்பட்டதுடன் அன்னதானமும் நடைபெற்றது. இதையடுத்து கந்த சஷ்டி பெருவிழா நிறைவு பெற்றது.