சபரிமலைக்கு புல்மேடு பாதையில் செல்ல ஆர்வம் காட்டும் பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2026 05:11
கூடலுார்: சபரிமலைக்கு சத்திரம், புல்மேடு வனப்பாதை வழியாக செல்வதில் ஐயப்ப பக்தர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
சபரிமலைக்கு செல்ல சத்திரம், புல்மேடு வனப்பாதை பாரம்பரியமானதாகும். குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு வழியாக 28 கி.மீ., தூரத்தில் உள்ள சத்திரம் சென்று அங்கிருந்து புல்மேடு வழியாக 12 கி.மீ., வனப்பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். வழக்கமாக எருமேலி, பம்பை வழியாக 100 கி.மீ., தூரம் சுற்றி வரும் நிலையில் மிகக் குறுகிய தூரத்தில் சத்திரம், புல்மேடு வனப்பாதை உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இப் பாதையை தேர்வு செய்கின்றனர்.
சத்திரத்தில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கோயிலில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்களுக்கு காலை 7:00 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வழக்கமாக மண்டல கால பூஜைக்கு நடை திறந்தபின் சில நாட்கள் கழித்து இப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே (நவ.19) பக்தர்கள் சத்திரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடந்து செல்லும் பக்தர்களும் அதிகரித்துள்ளனர்.