பதிவு செய்த நாள்
16
பிப்
2013
11:02
முசிறி: முசிறி கள்ளர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் உலக மக்கள் அமைதியான முறையில் வாழவும், மழை வேண்டியும், சொக்கநாதர்-மீனாட்சி திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி பக்தர்கள் சார்பில் திருமண பத்திரிக்கை அடித்து விநியோகிக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் தலைமையில் மீனாட்சி அம்மனுடன் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும், வீதி உலா வந்தார்.ஸ்வாமியின் வீதி உலாவின் பின்னால், பக்தர்கள் தங்களது வீட்டின் திருமணத்தை எடுத்துச் செல்லும் சீர்வரிசைகள் போல், பழ வகைகள், மஞ்சள், தாலிக்கயிறு, வளையல்கள், இனிப்பு பதாங்கங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஏந்தி வந்தனர்.அதைத்தொடர்ந்து மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது. பின்னர் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவுக்கு ஏற்பாடுகளை இளைஞரணி நண்பர்கள், தென், வட, புது கள்ளர் தெருவினைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்தனர்.