பதிவு செய்த நாள்
16
பிப்
2013
11:02
ஈரோடு: பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானையை பராமரிக்க உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 1980ம் ஆண்டு முதல் வேதநாயகி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. சங்கமேஸ்வரர் கோவிலில் தேர் உற்சவம், உற்சவர் புறப்பாடு, அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட சிறப்பு தினங்களின்போது, வேதநாயகியை கொண்டு இறைவழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.வேத நாயகிக்கு தினமும் காலை நல்லெண்ணெய், மிளகு கலந்து மூன்று கிலோ பொங்கலும், மாலை, 3 மணிக்கு பச்சை பயிறு, கொள்ளும் கலந்த கலவையாக, மூன்று கிலோ உணவும், 70 கட்டு தட்டும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.சில மாதத்துக்கு முன் கால், உடலின் பின்புறம் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்ட வேதநாயகி, புத்துணர்வு முகாமுக்கு பின், புத்துணர்ச்சியோடு, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு திரும்பியது. இந்நிலையில், நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி, அரசு ஒதுக்கும் நிதி ஆகியவற்றின் மூலம், வேதநாயகியை அதிகாரிகள் பராமரித்து வந்தனர். நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதால், சங்கமேஸ்வரர் கோவிலில் யானை பராமரிப்பு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 30 ஆண்டுக்கும் மேலாக வேதநாயகி என்ற யானை பராமரிக்கப்படுகிறது. அரசு நிதி, நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி, யானையை பராமரிக்க போதுமானதாக இல்லை. புத்துணர்வு முகாமின் போது, வேதநாயகிக்கு சத்தான ஆகாரங்களும், திரவ உணவுகளையும் அதிகம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.எனவே, சங்கமேஸ்வரர் கோவிலில், யானை பராமரிப்பு உண்டியல் வைத்து, அதன் மூலம் வரும் காணிக்கையை கொண்டு, வேதநாயகியை பராமரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, யானை பராமரிப்பு உண்டியல் வைக்கப்பட்டது.அதிகாரிகள் முன்னிலையில் மற்ற உண்டியல் திறப்பின் போது, யானை பராமரிப்பு உண்டியலும் திறக்கப்படும். உண்டியல் மூலம் கிடைக்கும் தொகை முழுவதுமே, வேதநாயகிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், என்றனர்.