பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
சென்னை: நாகூர், கோவளம் தர்காக்களில், தமிழக அரசின் அன்னதான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்திய தேசிய முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநில தலைவர் ஜவகர் அலி வெளியிட்டுள்ள அறிக்கை: முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தமிழகத்தில் உருது பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்பது, நிலுவையிலேயே உள்ளது. வருகிற பட்ஜெட்டில், இக்கோரிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா செயல்வடிவம் கொடுப்பார் என, முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், இஸ்லாமியர்கள் அதிகளவில் வந்து செல்லும், நாகூர், கோவளம் போன்ற தர்க்காக்களில், தமிழக அரசின் அன்னதான திட்டத்தையும், கழிப்பிடம், இலவச தங்கும் விடுதி வசதி ஆகியவற்றையும் செய்துதர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஜவகர் அலி கூறியுள்ளார்.