கும்பகோணம்: கும்பகோணம் யாதவர் தெரு பக்த ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில், 150 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால ஸ்வாமி கோவில், 3 தலைமுறைகளாக திருப்பணி செய்யப்படாமலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 12ம்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கி, நேற்று முன்தினம் வரை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.சர்வசாதகம் புலிவலம் சுந்தரம் பட்டாச்சாரியார் தலைமையில் பட்டாச்சாரியார்கள், வைணவ ஆகம முறைப்படி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் திருக்கல்யாண வைபவமும், வீதியுலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருப்பையா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.