பதிவு செய்த நாள்
21
பிப்
2013
11:02
ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் செப்பு தகடுகள் பொருத்திய புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவசைலத்தில் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் கொடிமரம் திடீரென முறிந்து விழுந்ததையடுத்து சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் பல லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் நடந்தது. கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் கொடிமரம் அமைப்பதற்கான பூஜைகள் துவங்கி நேற்று காலை வரை ஆறு கால பூஜைகள் நடந்தது. பொட்டல்புதூரில் இருந்து யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு கஜபூஜை நடந்தது. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் பிச்சை குருக்கள் தலைமையில் சிறப்பு கும்ப பூஜையும், பின்னர் வி.கே.புரம் சிவா பட்டர், நாகராஜபட்டர், கோவில் அர்ச்சகர் நாரம்புநாதபட்டர் ஆகியோர் கும்பங்களை ஏந்தியபடி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, சென்னை அமால்கமேஷன் குரூப் ரெப்கோ நிறுவன சேர்மன் சிவசைலம், பவானி சிவசைலம் ஆகியோர் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம், நந்தீஸ்வரர், பலிபீடம் ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகமும், கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து இன்று முதல் வரும் 23ம் தேதி மகா ருத்ர ஜெபம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி, தக்கார், சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.