பதிவு செய்த நாள்
21
பிப்
2013
11:02
ஊனமாஞ்சேரி: ஊனமாஞ்சேரி, கோதண்டராமர் சுவாமி கோவில் குளம், பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊனமாஞ்சேரி முதல் நிலை ஊராட்சியில், கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம், 50 சென்ட் பரப்பில், கோவில் குளம் அமைந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள்: இக்குளத்தை சுற்றி சிமென்ட் தளம் மற்றும் மழை நீர் சேகரிப்பு வசதி, கடந்த 2010ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. பொலிவுடன் காணப்பட்ட குளத்தை, திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தினர். தற்போது பராமரிப்பின்றி குளம் சீரழிந்து வருகிறது. குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தில் குவிந்து, தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது: கோவில் குளம் திறந்தவெளியில் உள்ளதால், பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான கழிவுப் பொருட்கள் விழுந்து, நீர் மாசடைந்து வருகிறது. குளத்தினை சீரமைத்து, கம்பி வேலி அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.