பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
கிருமாம்பாக்கம்: கன்னியக்கோவில்-பாகூர் ரோடு சந்திப்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், கன்னியக்கோவில்-பாகூர் ரோடு சந்திப்பில், புதிதாக நுழைவுவாயில் கட்டுவதற்காக, 17 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த 2010ம் ஆண்டு பணிகள் துவங்கியது. நுழைவுவாயில் பணிகள், சில தினங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. இந்த நுழைவுவாயிலுக்கு, "வேதாம்பிகை சமேத மூலநாத சுவாமி நுழைவுவாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நுழைவுவாயிலை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் தியாகராஜன், பன்னீர்செல்வம், ஏ.எப்.டி., சேர்மன் பாலன், உள்ளாட்சித் துறை செயலாளர் ஸ்ரீகாந்த், இயக்குனர் ரவிப்பிரகாஷ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவீந்திரன், இளநிலைப் பொறியாளர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, நுழைவுவாயில் மேல் அமைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது.