பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க, உடனடியாக "ஸ்கேனர் கருவி வாங்குமாறு, கோயில் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சித்திரை வீதிகளில் வி.ஐ.பி.,க்களின் வாகனங்களைகூட போலீசார் அனுமதிப்பதில்லை. தற்போது, பக்தர்களின் பொருட்களை, "மெட்டல் டிடெக்டர் கருவியால் சோதனை செய்து, பொருட்கள் வைப்பறையில் வைக்க அனுமதிக்கின்றனர். இதற்கு பதில், ரூ.37 லட்சம் மதிப்புள்ள "ஸ்கேனர் கருவியை வைத்தால், தடை பொருட்கள் முழுமையாக தடுக்கப்படும்; எனவே உடனடியாக வாங்குமாறு, கோயில் நிர்வாகத்திற்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இக்கருவியை தெற்கு கோபுரம் பகுதியில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு பொருட்களுடன் வருபவர்கள், இக்கோபுரம் வழியாக மட்டும்தான் செல்ல முடியும்.மேலும், வி.ஐ.பி.,க்களின் வாகனங்களை, அம்மன் சன்னதி வாசலில் நிறுத்துவதற்கு பதில், எதிரேயுள்ள நகரா மண்டபம் முன் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு காரில் வரும் வி.ஐ.பி.,க்கள், கீழஆவணிமூலவீதி, அம்மன் சன்னதி தெரு வழியாக நகரா மண்டபம் முன் இறங்கி, நடந்து செல்ல வேண்டும். விரைவில் இம்மாற்றம் அமலுக்கு வரவுள்ளது.